ஈ என இரத்தல் இழிந்தன்று.

வல்வில் ஓரி
 ஈயென இரத்தல் இழிந்தன்று

புலவர் கழைதின் யானையார் அரசன் வல்வில் ஓரியிடம் பரிசில் பெறச் சென்றார். வள்ளலாகிய ஓரி  வழங்கவில்லை. அதனால் புலவர் தான் வந்த வேளை சரியில்லை என்று நொந்துகொண்டு அவன் கொடையைப் பாராட்டும் எண்ணத்தில்..

ஈ என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர்,
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்,
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
தெண் நீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங் கடல்  
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உண, கலங்கி,
சேற்றொடு பட்ட சிறுமைத்துஆயினும்,
உண்நீர் மருங்கின் அதர் பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை,       
உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால்
புலவேன் வாழியர், ஓரி! விசும்பில்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.
                           புறநானூறு:204

ஈ என்று பல்லை இளித்துக்கொண்டு இரத்தல் இழிவு. அப்படி இரப்பவனுக்கு இல்லை என்று சொல்லி ஏதும் கொடுக்காமல் இருப்பது அதைக்காட்டிலும் இழிவானது.
இதனைப் பெற்றுக்கொள் என்று ஒருவனுக்கு வழங்குவது உயர்ந்த செயல். அவ்வாறு வழங்குவதை எனக்கு வேண்டாம், நான் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது கொடுப்பதைக் காட்டிலும் மேலானது.
தெளிந்த நீரை உடைய கடலில் செல்வோர் அதன் நீரை உண்ணமாட்டார்கள். வளர்க்கும் ஆடுமாடுகளும், காட்டு விலங்கினங்களும் சென்று உண்ணும் சேறுபட்டக் கலங்கல் நீரே ஆயினும் தாகம் தீர்த்துக்கொள்ள அந்த நீரைத் தேடியே விரும்பி மக்கள் செல்வர்.
ஓரி,
கருமேகம் வானத்திலிருந்து சுரக்கும் மழை போல வழங்கும் வள்ளல் நீ.
உன்னிடம் பரிசில் கிடைக்காவிட்டால், தான் புறப்பட்டு வந்த நேரம் சரியில்லை என்று, நாடி வந்தவர் நொந்துகொள்வார்களே தவிர வள்ளல்களைப் பழிக்கும் வழக்கம் இல்லை. 
அதனால் உன்னை நான் நொந்துகொள்ள மாட்டேன். நீ நீடுழி வாழ்க.  
என்று பாடுகிறார்..

       முனைவர் ஆ.பூபாலன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீரும் நிலனும்

சங்க இலக்கியத்தில் உடும்பு

நல்லூர் நத்தத்தனார்