நல்லூர் நத்தத்தனார்

நல்லூர் நத்தத்தனார்

 இரண்டு ஆயிரம் ஆண்டுகால வரலாற்றைக் கூறும் தூண்..

சென்னையிலிருந்துப் புதுவைக்கு கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகச் செல்லும்பொழுது 107வது கிலோமீட்டரில் நல்லூர் எனும் ஊர் உள்ளது.. இந்த ஊரில் வாழ்ந்தவர் சங்க இலக்கிய சிறுபாணாற்றுப்படை என்னும் பாடலை இயற்றிய நல்லூர் நத்தத்தனார் ஆவார்..
இந்த ஊர் இருந்த பகுதி இடைக்கழி நாடு ஆகும்..
இப்புலவருக்கு 1958ஆம் ஆண்டு முதலமைச்சர் பக்தவச்சலம் மற்றும் சென்னை துணை மேயர் பார்த்தசாரதி ஆகியோர் சிலை நிறுவி உள்ளனர்.. பின்னாளில் முனைவர் ஔவை நடராசன் ஐயா அவர்கள் தலைமையில் நினைவுத் தூண் அமைத்துள்ளார்கள்..
இன்று மரக்காணத்திலிருந்து செய்யூருக்கு பயணித்தபோது..

நத்தத்தனார் பற்றி கூறியபோது அவர் படைத்த சிறுபாணாற்றுப்படைப் பற்றியும் கூறவேண்டும் அல்லவா?
மிகச் சிறந்த உவமைகளை கூறும் பாடல்.
இப்பாடலில் வரும் பாணனின் வறுமையைப் படிக்கும் போதே நமக்கு நெஞ்சம் கனக்கிறது..
அத்தகைய பாணனுக்கு மற்றொரு பாணன் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது..
அதாவது,
பாணனின் சமையல் கூடம் எவ்வறு உள்ளது என்பதை சிறுபாணாற்றுப்படை விவரிக்கிறது. கண்விழிக்காத வளைந்த நாய்க்குட்டி தாய்மடியில் வாய் வைத்துப் பால் குடிக்கிறது. தாயிடம் பால் இல்லாததால் வலி பொறுத்துகொள்ள முடியாத அப்போதுதான் குட்டி ஈன்ற தாய் நாய் கத்துகிறத். இத்தகையான ஏழ்மையான வீடு பாணன் வீடு. பாணன் வீட்டு அடுப்படியில் நாய் குட்டி ஈன்று இருக்கிறது இதுபாணனின் வறுமை நிலையை உணர்த்துகிறது. இங்கே நீண்ட நாள் அடுப்பு பயன்படுத்தப் படாததால் நாய் குட்டி போட்டுள்ளது என்று வறுமையைப் புலப்படுத்துகிறார் ஆசிரியர். வீட்டின் அமைப்பு மேல்கூறி இடிந்து விழுவது போல் உள்ளது. கரையான் பிடித்த சுவர். வீடெல்லாம் புழுதி. புழுதியிலே பூத்த காளான். இப்படிப்பட்ட வீட்டில் பசியில் வருந்தி ஒடுங்கிய வயிறு வளை அணிந்த கையும் உடைய பாணனின் மனைவி. தன் கைவிரல் நெகத்தால் குப்பையிலே முளைத்திருக்கிற கீரையை எடுத்து உப்பு கூட போட வழியில்லாமல் இல்லாமால் சமைத்த உணவு இப்படிப்பட்ட உணவை உண்பதை மற்ற பெண்கள் பார்த்தால் நகைப்பு ஆகிவிடும் என்று கருதி கதவை அடைத்து வைத்துவிட்டு உப்பில்லாத குப்பைக் கீரையை சமைத்து சாப்பிட்டனர் என்று பாடுகிறார்... 
இதுமட்டுமல்ல..
 இவ்வூர் எங்கள் ஊருக்கே கிழக்கே உள்ளது. மேற்கே இதே தொலைவில் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்னும் புலவர் நன்னன் சேய் நன்னனைப் பாடிய கூத்தராற்றுப்படை எனும் மலைபடுகடாம் கூறும் நவிரமலை (சவ்வாது மலை) உள்ளது..
இத்தகையதொரு சங்கப் புலவர்கள் வாழ்ந்த மண்ணுக்கு அருகாமையில் வாழ்கிறோம் என்பதே பெருமை..

           முனைவர் ஆ.பூபாலன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீரும் நிலனும்

சங்க இலக்கியத்தில் உடும்பு