நீரும் நிலனும்
நீரும் நிலனும்
குடபுலவியனார் என்னும் புலவர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே பாண்டிய மன்னனைப் பார்த்து உனக்கு நீடித்த புகழ் வேண்டுமெனில் மழைநீரை தேக்கச் செய் என்று அறிவுறுத்திப் பாடியுள்ளார்..
ஆனால் இதை இன்று எந்த ஆட்சியாளரும் பின்பற்றவில்லை..
கீழ்காணும் படத்தில் உள்ள குரங்குகளின் நிலை நமக்கும் வரலாம்....
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியன்ஞாலம்
தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ
ஒருதா மாகிய வுரவோ ரும்பல்
ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை யிரீஇய
பெருமைத் தாகநின் னாயு டானே
நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்
பூக்கதூஉ மினவாளை
நுண்ணாரற் பருவராற்
குரூஉக்கெடிற்ற குண்டகழி
வானுட்கும் வடிநீண்மதில்
மல்லன்மூதூர் வயவேந்தே
செல்லு முலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ யாகல் வேண்டினுஞ் சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினு மற்றதன்
தகுதி கேளினி மிகுதி யாள
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோரீண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே
வித்திவா னோக்கும் புன்புலங் கண்ணகன்
வைப்பிற் றாயினு நண்ணி யாளும்
இறைவன் றாட்குத வாதே யதனால்
அடுபோர்ச் செழிய விகழாது வல்லே
நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம விவட்டட் டோரே
தள்ளா தோரிவட் டள்ளா தோரே.
புறநானூறு 18
ஒலிக்கின்ற கடலால் முழுதும் சுற்றிச் சூழப்பட்டு பரந்து கிடக்கின்ற அகன்ற உலகத்தைத்
தனது முயற்சியால் உன்னுடைய புகழை இவ்வுலகத்தில் நிலைநிறுத்தி ஒன்றாக
தாமே ஆட்சி செய்த வலியவர்களின் வழித்தோன்றலே!
ஒன்றைப் பத்து முறையாக அடுக்கிய கோடி என்னும் எண்ணைக் கடைசியாக இருத்திய பெருமையுடைய எண் அளவுக்கு உனது வாழ்நாள் பெருகட்டும்.
நீரின் மட்டத்திற்குத் தாழ்ந்த சிறிய காஞ்சியின் பூக்களைக் கவரும் இனமாகிய வாளை மீன்களும், நுண்ணிய ஆரல் மீன்களும்,
ஒளிறும் கெளிறு மீன்களும் நிறைந்த ஆழமான அகழியினையும் வானம் அஞ்சும் அளவு உயர்ந்த அழகிய அரண்களையும்,
வளமும் பொலிவும் உள்ள பழமையான ஊரினையுடைய வலிமையான வேந்தே!
உன் இறப்பிற்குப் பின் நீ போக விரும்பும் மறுமைப் பேறாகிய சொர்க்க உலகத்தை நுகரும் செல்வம் விரும்பினும்,
உலகத்தைக் காக்கும் பிற வேந்தர் தோள் வலிமையைக் கெடுத்து நீ ஒருவனே தலைவனாவதை விரும்பினும்,
மிக்க நல்ல புகழை இவ்வுலகத்தே நிறுத்துதலை விரும்பினும் அத்தகைய விருப்பத்தை நிறைவேற்ற நீ செய்ய வேண்டிய தகுந்த செயல்களை இப்பொழுது கேட்பாயாக பெரியோனே!
நீர் இன்றி அமையாத இவ்வுலகில் வாழும் உடம்பிற்கெல்லாம் உணவால் வளர்க்கப்பட்ட உடம்பு உணவையே பொறுத்து என்பதால்,
உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தோர் ஆவர் எனப்படுகிறது.
ஆதலால் உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர் நீரில்லா இடத்தில் அந்நீரையும், நிலத்தையும் ஒன்றாக இணைத்துச் செயல் படுத்தியவர்கள்
இவ்வுலகத்தில் உடம்பையும் உயிரையும் படைத்தவர்களாவர்.
நெல் முதலான தானியங்களை விதைத்து மழை வருவாய் ஒன்றையே பார்த்திருக்கும் வானவாரித் தரிசு நிலமானது இடம்
அகன்ற நிலப்பரப்பாயினும் பொருந்தியாளும் அரசனது முயற்சிக்குப் பயன்படாது. ஆதலால் கொல்லும் போர்த் தொழிலை உடைய செழியனே!
இதனை அலட்சியப்படுத்தாது, விரைவில் நிலம் பள்ளமாக உள்ள குழிந்த இடங்களில் நெடிய நீண்ட கரையெடுத்து, நீர்நிலை அமைத்து நீரைத் தேக்கி வேண்டுமளவு பயன்படுமாறு பெருகச் செய்.
அப்படிச் செய்தோர் தாம் செல்லும் உலகத்து அறம், பொருள், இன்பம் மூன்றினையும் இவ்வுலகத்து தம் பேரோடு தழைக்கச் செய்தோர் ஆவர். அந்நீரைப் பெருகச் செய்யாதோர் இவ்வுலகத்து தம் பெயரைத் தழைக்கச் செய்யாதோராவர்.
முனைவர் ஆ.பூபாலன்
கருத்துகள்
கருத்துரையிடுக