இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாய்க்கால் போன்ற நட்பு அவசியம்

படம்
வாய்க்கால் போன்ற நட்பு தமிழிலக்கியங்கள் நட்பு மற்றும் உழவைப்பற்றி மிகுதியாகப் பேசுகிறது.  நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசாட்சியோடு ஒப்பிட்டு வயல் வரப்பு மற்றும் வாய்க்காலும் பேசப்படுகிறது. இதனை சற்று வித்தியாசமாக நாலடியார் கூறியுள்ளது. நான் இன்று காலையில் வாய்க்காலை சீர் செய்தபோது இந்த பாடல் நினைவிற்கு வந்தது.. நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு.  நாலடியார் -218 நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல மிகவும் நெருக்கம் உள்ளவராக இருந்தாலும், ஈயின் காலளவாயினும் உதவி செய்யாதவர் நட்பினால் என்ன பயன் உண்டாகும்? ஒரு பயனும் உண்டாகாது. ஆதலால், வயலை விளையும்படி செய்கின்ற வாய்க்காலைப் போன்றவர் நட்பினை, தூரத்தில் இருப்பதாயினும் போய்க் கொள்ளல் வேண்டும். (வயலால் தனக்கு ஒரு பயனும் இல்லையாயினும் தூரத்து நீரைக் கொணர்ந்து வயலை விளைவிக்கும் வாய்க்கால் போலும் பண்புடையாரது நட்பினை நாடிப் பெற வேண்டும்).

மூதுரை

படம்
மூதுரை  இஃது ஔவையாரின் நீதி நூல்களுள் ஒன்று. பழமை வாய்ந்த அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது (மூப்பு + உரை) மூதுரை என அழைக்கப்படுகிறது. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர்.                                மூதுரை: 2 நல்லவர்களுக்கு செய்யும் உதவி, கல்லின் மேல் எழுத்தைச் செதுக்குவது போன்றது. அது எவரும் அறியும் வண்ணம் என்றும் நிலைத்திருக்கும். அப்படியல்லாது இரக்கமற்றவர்களுக்கு செய்யும் உதவி எவர்க்கும் பயன்தராது. அது நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி நிலைக்காது போகும்.